கண்ணன் பிறந்தான்

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்

கண்ணன், கேசவன், நம்பி பிறந்தினில்

எண்ணெய், சுண்ணம் எதிர் எதிர் தூவிட

கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!

*

ஓடுவார், விழுவார், உவந்து ஆலிப்பார்,

நாடுவார், நம்பிரான் எங்கு உற்றான் என்பார்,

பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று

ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே!

*

பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்

காணத் தாம் புகுவார், புக்குப் போதுவார்

’ஆண் ஒப்பர் இவன் நேரில்லை காண்-திரு

வோணத்தான் உலகு ஆளும்’ என்பார்களே!

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம்

பாடியவர்: பெரியாழ்வார்

சூழல்: கண்ணன் பிறந்த ஆனந்தக் காட்சி, கோகுலத்தில் கொண்டாட்டம்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

வண்ண மாடங்கள் சூழ்ந்த திருக்கோட்டியூர் கண்ணன், கேசவன், நம்பி கோகுலத்தில் பிறந்தான். மகிழ்ச்சியடைந்த ஆயர்கள் மணம் நிறைந்த எண்ணெய், வண்ணப் பொடிகளை ஒருவர்மீது ஒருவர் தூவி மகிழ்ந்தார்கள், அதனால் கண்ணன் பிறந்த நந்தகோபர் மாளிகையின் முற்றம் முழுக்கச் சேறாகிவிட்டது!

*

கண்ணன் பிறந்த செய்தி கேள்விப்பட்டதும் ஆயர்கள் நந்தகோபர் மாளிகையை நோக்கி ஓடினார்கள், முற்றத்தில் பரவியுள்ள அந்தச் சேற்றில் தடுமாறி விழுந்தார்கள், சமாளித்துக்கொண்டு எழுந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள், ’எங்கள் தலைவன் எங்கே? எங்கே?’ என்று தேடினார்கள், அவன் புகழைப் பாடினார்கள், பல வகையான வாத்தியங்களை இசைத்தார்கள், ஆடினார்கள்… இப்படி ஆட்டமும் பாட்டமுமாக ஆயர்ப்பாடிமுழுவதும் அன்று பெரிய கொண்டாட்டம்தான்!

*

பாதுகாப்பான நந்தகோபர் இல்லத்தில் அன்றைக்குப் பெரும் கூட்டம். சிறப்பு மிகுந்த பிள்ளைக் கண்ணனைப் பார்க்க வருகிறவர்களும் போகிறவர்களும் அவன் புகழைப் பேசியபடி இருந்தார்கள். ‘இவனுக்கு இணையாக ஓர் ஆண்மகன் கிடையாது, திருவோண நட்சத்திரத்தில் பிறந்த இவன் உலகை ஆளப்போகிறான்.’

துக்கடா:

 • கண்ணன் பிறந்தது மதுரா நகரில் உள்ள சிறைச்சாலையில். ஆனால் அந்த விஷயம் மிகச் சிலருக்குமட்டுமே தெரியும். அதனால்தான் அவன் கோகுலத்தில் / ஆய்ப்பாடியில் பிறந்ததாகக் கொண்டாடுகிறார்கள்
 • அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள், சமச்சீர், மன்னிக்க, ‘செம’ச்சீர் உடை (Uniform அல்ல, சிறப்பு மிகுந்த 😉 கண்ணனைப் போற்றிச் சீடை சாப்பிடுங்கள் :>

047/365

Advertisements
This entry was posted in ஆழ்வார்கள், கண்ணன், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பெரியாழ்வார், Uncategorized. Bookmark the permalink.

5 Responses to கண்ணன் பிறந்தான்

 1. Happy Birthday Kanna! 🙂
  சொக்கன் அருளும் சமச்சீர் சீருடை சீடை எங்களுக்கே! :(me + murugan) :))

  பெரியாழ்வார் பாசுரத்தில் வரலாற்றுப் பிழைகள் உள்ளன :))
  1. //திருக்கோட்டியூர் கண்ணன், கேசவன், நம்பி பிறந்தினில்//
  கண்ணன் பிறந்தது வடமதுரை-கோகுலம் அல்லவா? எப்படி திருக்கோட்டியூர்?
  2. கண்ணன் பிறந்தது = ரோகிணியில்! ஆனால் ஆழ்வார் ‘திருவோணத்தான்’ என்று date of birth ஐ மாற்றிப் பள்ளியில் சேர்க்கிறாரோ? இது தவறல்லவா? 🙂 ஆழ்வாரே ‘பொய்’ சொல்லலாமா? :))

 2. குழந்தை பிறக்கும் போது, அந்நாளைய தமிழர்கள் செய்த சடங்குகள் பலவற்றை இப்பாடலில் காணலாம்! ஐம்படைத்தாலி சூட்டுதல், மஞ்சக் கிழங்கால் நா-வழித்தல், எண்ணெய்+வண்ணப் பொடி கலந்து வீட்டின் முற்றத்தில் தூவுதல்…பறை கொட்டுதல் – இப்படிப் பல!

  சொக்கன் – ஒரு ஐயம்!
  //காணத் தாம் புகுவார், புக்குப் போதுவார்// – வருகிறவர்களும் போகிறவர்களும் என்று சொல்லி இருக்கீங்க!
  போதுதல் = போதல் என்று பொருளா?

  எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?
  சில்லென்று அழையேன்மின், நங்கைமீர் போதருகின்றேன்!
  – இதில் சில்லுன்னு கூப்பிடாதீங்க! இதோ வரேன் என்று அல்லவா வருகிறது?
  போதுதல் = போதலா? வருதலா?

 3. //ஆண் ஒப்பர் இவன் நேரில்லை காண்//

  🙂
  உக்கும், இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை! பிறக்கும் போதே இந்தப் பயலை இப்படி ஏத்தி விட்டதால் தான், பெண்கள் சேலையை ஒளிப்பது, வம்புக்கு இழுப்பது-ன்னு லூட்டி அடிச்சான்!
  என் முருகனைப் போல நல்ல பிள்ளையா, அமைதியா, ஞானக் கொழந்தையா இருக்க முடியுமா இவனால?:)

 4. //திருவோணத்தான் உலகு ஆளும்’ என்பார்களே!//

  பிறவா-இறவா இறைவனுக்கும் ஒரு நட்சத்திரத்தை அடையாளப்படுத்துவது மக்கள் வழக்கம்! சிவபெருமானுக்கு=திருவாதிரை,
  திருமாலுக்கு=திருவோணம்,
  முருகனுக்கு=திருக்கார்த்திகை…இப்படி!

  அதில், திருவோணம் என்பது பண்டைத் தமிழ்க் குடியில் மிகப்பெரும் விழா! இன்றும் கேரளத்தில் அப்படியே!
  மாயோன் மேய “ஓண” நன்னாள் – என்று பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மதுரைக் காஞ்சி பேசும்!
  திருவோண நாள் பற்றி எட்டுத்தொகை, சிலப்பதிகாரம் போன்றவையும் குறிப்பிட்டுச் செல்கின்றன!

  இப்படி, புகழ் மிக்க திருவோணம் என்பதாலும், மண்ணாளும் அரசர்கள் திருமாலின் உருவமாகவே – பூவைநிலை – என்னும் துறை வழியாகப் பாடப்பட்டதாலும்…திருவோணத்தில் பிறந்தவர்கள் உலகாளும் என்பார்களே என்பது மக்கள் வழக்காயிற்று! அதையே இங்குச் சொல்லிப் பாடுகிறார்!

 5. //கண்ணன் பிறந்தது = ரோகிணியில்! ஆனால் ஆழ்வார் ‘திருவோணம்’ என்று date of birth ஐ மாற்றிப் பள்ளியில் சேர்க்கிறாரோ? ஆழ்வாரே ‘பொய்’ சொல்லலாமா?:)//

  பொய்ம்மையும் வாய்மை இடத்த…

  இதைப் ‘பொய்’ என்பதைக் காட்டிலும், ஆழ்வாரின் “பேதை” உள்ளம் என்று தான் சொல்ல வேண்டும்!
  அந்த யசோதைக்குச் சேதி தெரியாது! ஆனால் ஆழ்வாருக்கு முழுக் கதையும் தெரியுமே!
  உள்ளத்தால் ஒரு பெண்ணாகவே – கண்ணனின் அம்மாவாகவே மாறி விடுகிறார்

  ஊரெல்லாம் கம்சனின் ஆட்கள், ரோகிணி அன்று பிறந்த குழந்தைகளைத் தேடித் தேடிக் கொன்று வருகிறார்கள்!

  இதில் கண்ணனின் அம்மாவுக்குப் பயமோ பயம்! பொத்தி வச்சிப் பாதுகாப்பது ஒன்று! அதுக்காக வாராது வந்த மாமணியாம் குழந்தைப் பிறப்பைக் கொண்டாடாமல் இருக்கவும் முடியாது! ஆயர்ப்பாடியே இன்பத்தில் ஆழ்ந்திருக்கு! என்ன செய்ய?

  பத்து பேர் சபையில், குழந்தையின் நட்சத்திரம் சொல்லுங்கோ-ன்னு கேக்குறாங்க!
  உதறல் எடுக்கிறது ஆழ்வாருக்கு! கம்சன் ஒற்றர்கள் இங்கு இருப்பார்களோ?

  ஆழ்வார் என்னும் தாய் துணிந்து ‘பொய்’ சொல்கிறாள்!
  அத்தத்தின் (ஹஸ்த நட்சத்திரம்) பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் என்று பாடுகிறாள்!
  * அத்தத்தின் முன்னிருந்து பத்தாம் நாள் = திருவோணம்
  * அத்தத்தின் பின்னிருந்து பத்தாம் நாள் = ரோகிணி

  கம்சன் காதுகளுக்கு குழந்தை பிறந்த நட்சத்திரம் போய்ச் சேரக் கூடாது-ன்னு இப்படிக் குழப்படி செய்கிறார்! 🙂 அத்தத்தின் பத்தாம் நாள்-ன்னு எதை எடுத்துக்கறது? = திருவோணமா? ரோகிணியா?

  கண்ணன் = திருமாலின் அவதாரம் ஆனதால், திருமாலுக்கு உரிய திருவோணம்-ன்னு சொல்லி விடலாம்!
  மங்களகரமா, சபையில் வச்சிக் கேட்கும் போது, ‘பொய்’யும் ஆகாது! கம்சனுக்கும் போவாது…

  இப்படிப் பேதைத்தனமா யோசிக்கும் ஒரு பெண்-மனசு ஆயிருச்சி! வாயில் ‘பொய்’யும் வந்துருச்சி! – திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்ற ‘பொய்’யும் சொல்லியாச்சு! 🙂

  எத்தனையோ ஆழ்வார்கள் இருக்க…
  திராவிட வேதம் தந்த தலைமை ஆழ்வாரான நம்மாழ்வார் இருக்க…
  பெரியாழ்வாருக்கு மட்டும் ஏன் “பெரிய” ஆழ்வார் என்று பெயர்? = இந்த பேதையான ‘பொய்’யால் தான்! பரிவால் சொன்ன பொய்! பொங்கும் பரிவால் சொன்ன பொய்!

  மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
  தங்கள் ஆர்வ அளவே தான் நிற்க – “பொங்கும்
  பரிவாலே” வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
  பெரியாழ்வான் என்னும் பெயர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s