பொய் வலை

வன்கண் கானவன் மென்சொல் மடமகள்

பின்புல மயக்கத்து உழுத ஏனல்

பைம்புறச் சிறுகிளி கடியு நாட!

பெரிய கூறி நீப்பினும்

பொய்வலைப்படூஉம் பெண்டு தவப்பலவே.

நூல்: ஐங்குறுநூறு (#283)

பாடியவர்: கபிலர்

திணை: குறிஞ்சி

சூழல்: காதலன் ஏதோ பொய் சொல்லி மாட்டிக்கொண்டுவிடுகிறான். காதலிக்குக் கோபம். அவளைப் பார்த்துச் சமாதானப்படுத்த வருகிறான் காதலன். இதைத் தெரிந்துகொண்ட தோழி அவனை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து வாசலிலேயே நிறுத்திவைக்கிறாள். ஆனால் காதலி, மனம் இரங்கி அவனை உள்ளே அழைக்கிறாள், மன்னித்தும்விடுகிறாள். கடுப்பான தோழி இப்படிப் பாடுகிறாள்

’சுருக்’ விளக்கம்: யோவ், நீ ஒரு டுபாக்கூர்ன்னு ஊருக்கே தெரிஞ்சாலும், உன்னை நம்பறதுக்குன்னு சில பெண்கள் இருக்காங்களே! எங்கே போய் முட்டிக்கறது?

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

பயமில்லாத காட்டுப்பயல் ஒருவன். அவனுடைய நிலத்தில் தினைப்பயிர் விளைந்துள்ளது. சிறிய பச்சைக் கிளிகள் அதை மேய்ந்து காலி செய்யப் பார்க்கின்றன. மென்மையாகப் பேசும் கொடிச்சி அந்தக் கிளிகளை ஓட்டுகிறாள், அப்படிப்பட்ட அருமையான காட்சிகளைக் கொண்ட குறிஞ்சி நிலத்துக்குச் சொந்தமானவனே,

நீ செய்யும் ‘லீலை’களெல்லாம் எங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றன. எங்கள் வீட்டுப் பெரியவர்கள் உன்னுடைய குறைகளையும் ஏமாற்றுகளையும் விளக்கமாகச் சொல்கிறார்கள். ‘அந்தப் பயலோட சகவாசம் வேண்டாம்’ என்று எச்சரிக்கிறார்கள்.

ஆனால், எத்தனை சொல்லி என்ன பிரயோஜனம்? இதோ, என் தோழியைப்போல், நீ விரிக்கும் பொய் வலையில் மயங்கி விழுவதற்கென்றே பல பெண்கள் காத்திருக்கிறார்களே!

துக்கடா

 • ’கொடிச்சி’ என்றால் குறிஞ்சி (மலையும் மலை சார்ந்தவையும்) நிலப் பெண்
 • ஐங்குறுநூறு = 5 * 100 சிறிய (4 அல்லது 5 வரி) பாடல்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொன்றுக்கும் 100 – இங்கே இடம்பெற்றுள்ளது குறிஞ்சி நிலப் பாடல்
 • இதில் இன்னொரு விசேஷம், ஐங்குறுநூறு பத்துப் பத்துப் பாடல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அந்தப் பத்து பாடல்களிலும் ஒரேமாதிரி பொருள்கள் / காட்சிகள் வருவது தனி அழகு – உதாரணமாக, இன்று நாம் பார்க்கும் பாடல் ‘கிள்ளைப் பத்து’ அதாவது ‘கிளி’களைக் காட்சிப் பொருளாகக் கொண்ட தொகுப்பிலிருந்து ஒரு சாம்பிள்!
 • மீதமிருக்கும் ‘கிளி’ப் பாடல்களைப் படிக்க இங்கே செல்லவும் –> http://goo.gl/m4ALK

036/365

This entry was posted in அகம், இயற்கை, கபிலர், கிண்டல், குறிஞ்சி, தோழி, பெண்மொழி, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பொய் வலை

 1. பிழையுள்ளது.
  //’கொடிச்சி’ என்றால் குறிஞ்சி (காடும் காடு சார்ந்தவையும்) நிலப் பெண்//

  குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்.

  • என். சொக்கன் says:

   தவறுதான் நண்பரே. அவசரத்தில் பிழை செய்துவிட்டேன். மன்னியுங்கள். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s