தூது போ நாராய்

நாராய், நாராய், செங்கால் நாராய்!

பழம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்!

நீயும் நின் மனைவியும் தென்திசைக் குமரி ஆடி

வட திசைக்கு ஏகுவார் ஆயின்,

எம் ஊர்ச் சத்திமுத்தி வாவியுள் தங்கி,

நனைசுவர்க் கூரைக் கனைகுரல் பல்லி

பாடுபார்த்து இருக்கும் எம் மனைவியைக் கண்டு,

‘எங்கோன் மாறன் வழுதி கூடலில்,

ஆடை இன்றி வாடையின் மெலிந்து

கை அது கொண்டு மெய் அது பொத்திக்

கால் அது கொண்டு மேல் அது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பு என உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டனம்’ எனுமே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: சத்திமுற்றப் புலவர்

சூழல்: வறுமையில் வாடிய புலவர் இவர் (நிஜப்பெயர் தெரியவில்லை). பாண்டிய அரசனைப் பார்த்து, அவனை வாழ்த்திப் பாடினால் ஏதாவது பரிசு கிடைக்கும் என்று நினைத்தார். இன்றைய கும்பகோணத்துக்கு அருகே இருக்கும் சக்திமுற்றம் என்ற தன் ஊரில் இருந்து நடந்தே மதுரைக்கு வந்தார். ஆனால் மன்னனைப் பார்க்கமுடியவில்லை – பாண்டியன் தமிழ் ரசிகனாகவே இருப்பினும், வாயில்காப்போரிடம் இவரது புலமை செல்லுபடியாகவில்லை. வருத்தத்துடன் திரும்பிய புலவர் ஒரு சத்திரத்தில் தங்குகிறார். வானத்தில் பறந்து செல்லும் நாரைகளைப் பார்த்து இப்படிப் பாடுகிறார்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நாரையே, நாரையே,

சிவந்த கால்களைக் கொண்ட நாரையே, நன்கு முற்றிய பனங்கிழங்கைப் போல் வாய் பிளந்த நாரையே, கூர்மையான, பவளத்தைப் போல் சிவந்த அலகைக் கொண்ட நாரையே,

நீயும், உன் மனைவியும் தெற்கே உள்ள கன்னியாக்குமரியில் விளையாடிவிட்டு வடக்கே சென்றால், என்னுடைய சத்திமுற்றத்துக் குளத்தில் தங்குங்கள். அங்கே என் மனைவியைப் பார்த்து ஒரு செய்தி சொல்லுங்கள்.

‘நாங்கள் உன் மனைவியை இதற்குமுன் பார்த்தது இல்லையே?’ என்று யோசிக்கிறீர்களா? ஒரு நல்ல அடையாளம் சொல்கிறேன்:

எங்கள் கூரை வீட்டின் சுவர் மழையில் நனைந்து சிதைந்திருக்கும். அங்கே ஓர் ஏழைப் பெண் சுவற்றுப் பல்லி ஏதாவது சகுனம் சொல்கிறதா என்று எதிர்பார்த்துக்கொண்டு ஏக்கத்துடன் காத்திருப்பாள். அவள்தான் என் மனைவி.

அவளை நீங்கள் பார்த்தவுடன், ‘எங்கள் தலைவனாகிய பாண்டியனின் ஊரில் கடுமையான வாடைக்காற்று, குளிர், அதில் சரியான ஆடைகூட இல்லாமல் நடுநடுங்கியபடி கை கால்களால் உடம்பைப் பொத்திக்கொண்டு, பெட்டியினுள் அடைக்கப்பட்ட பாம்பைப்போல் மூச்சுவிடும் ஏழை ஒருவனைப் பார்த்தோம்’ என்று சேதி சொல்லிவிடுங்கள்.

துக்கடா

 • இந்தப் பாடலுக்குப் பின்கதை ரொம்ப முக்கியம் :>
 • நாரையின் மூக்கைப் பிளந்த பனங்கிழங்குக்கு உவமையாகச் சொன்ன இந்த அற்புதமான பாடலைப் பாண்டியன் கேட்டானாம் (எப்படி? வாடைக்காற்றுக்கு நடுவே மாறுவேஷத்தில் நகர்வலம்?) உடனே அவரை அழைத்துப் பரிசு கொடுத்துக் கௌரவித்தானாம், இவரும் சந்தோஷமாக மன்னனைப் புகழ்ந்து பாடிவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தாராம்
 • ட்விட்டரில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டுக் கேட்ட நண்பர் கபிலன் –> http://twitter.com/#!/sendeee/status/96420735224004609

032/365

Advertisements
This entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், கதை கேளு கதை கேளு, குளிர், தனிப்பாடல், தனிமை, தூது, நண்பர் விருப்பம், வறுமை. Bookmark the permalink.

3 Responses to தூது போ நாராய்

 1. GiRa ஜிரா says:

  பாட்டில் இருக்க வேண்டியது இருந்தால் அது மக்களிடம் பாராட்டுப் பெறும் என்பதற்கு இந்தப் பாடல் சிறந்த எடுத்துக் காட்டு.

  பாடியவர் பெயர் கூடத் தெரியாது. சத்திமுத்தம் என்று தன்னுடைய ஊர்ப்பெயரைக் குறிப்பிட்டதால் அவருக்குச் சத்திமுத்தப் புலவர் என்றே பெயர் நிலைத்து விட்டது.

  இந்தப் பாடலில் நான்கு ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன.

  தென் திசைக் குமரி
  வடதிசை
  மாறன் வழுதி கூடல்
  சத்திமுத்தம்

  தென்திசைக் குமரிக்கு வந்த நாரைகள் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவை என்று புலவருக்குத் தெரிந்திருக்கிறது. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்ததும் இந்தப் பறவைகள் குளிர்ப்பகுதியான வடபகுதிக்குச் சென்று விடும். இந்த இடப்பெயர்ச்சியை அப்போதே புரிந்து வைத்துள்ளார்கள்.

  வடதிசை ஊரின் பெயரைக் குறிப்பிடாததிலிருந்து அவருக்கு அந்த ஊர்களின் பெயர்கள் தெரியவில்லை என்றும் நினைத்துக் கொள்ளலாம்.

  சரி. மற்ற இரண்டு ஊர்களையும் பார்ப்போம். ஒன்று மாறன் வழுதி கூடல். மாறன் என்ற பெயரும் வழுதி என்ற பெயரும் பாண்டியரது சிறப்புப் பெயர்கள். அந்தப் பாண்டியர்களின் கூடல் நகரமான மதுரையம்பதிதான் இந்த ஊர்.

  அடுத்த ஊர் சத்திமுத்தம். இந்த ஊர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சிற்றூர். அதாவது சோழநாட்டு ஊர். இது புலவரின் சொந்த ஊர். சோறுடைய சோழநாடு என்று சொல்லப்படும் நாட்டின் புலவர் வறுமையைப் போக்க நாடுவது பாண்டியனை.

  தமிழ் எங்கு செல்லுமோ அங்குதானே புலமையைக் காட்டிப் பரிசில் பெற முடியும்.

  • நன்றி இராகவன்! மிக நல்ல பாடல். எனக்கு பிடித்த வரிகள்:

   ஆடை இன்றி வாடையின் மெலிந்து
   கை அது கொண்டு மெய் அது பொத்திக்
   கால் அது கொண்டு மேல் அது தழீஇப்
   பேழையுள் இருக்கும் பாம்பு என உயிர்க்கும்

   புலமையும், வறுமையும் ஒன்றோடு ஒன்று இயைந்தது போலும். 😉

 2. Isai says:

  மதுரையில் நடுங்கும் குளிர் மார்கழி / தை’யாக இருக்கலாம்.
  மதுரை – கன்னியாகுமரி = 250கீமீ ககு-சத்திமுத்தம்=450கீமீ. நாரை புலவரின் மனைவியை சந்தித்து சேதி சொல்ல, எப்படியும் 3மாசம் ஆகும் போல. பாவம் அந்தப் பெண்மணி.. காலம்தொறும் துன்புறுவது அவர்கள் தான். 😦

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s