நடமாடும் கோட்டை

இறும்பூதுஆல் பெரிதே கொடித் தேர் அண்ணல்

வடிமணி அணைத்த பணை மருள் நோன்தாள்

கடிமரத்தால் களிறு அணைத்து

நெடுநீர துறை கலங்க

மூழ்த்து இறுத்த வியன் தானையொடு

புலங்கெட நெறிதரும் வரமில் வெள்ளம்

வாள்மதிலாக, வேல்மிளை உயர்த்து

வில்விசை உமிழ்ந்த வைம்முள் அம்பின்

செவ்வாய் எஃகம் வளைஇய அகழின்

கார் இடி உருமின் உரறு முரசின்

கால்வழங்கு ஆர் எயில் கருதின்

போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே!

நூல்: பதிற்றுப்பத்து (#33)

பாடியவர்: காப்பியாற்றுக் காப்பியனார்

பாடப்பட்ட அரசன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்

திணை: வஞ்சி

துறை: பாடாண்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

கொடி பறக்கும் தேர்களை உடைய அரசே,

உன்னை நினைக்க நினைக்க எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன் தெரியுமா?

உனது படையில் உள்ள யானைகளின் கழுத்தில் நல்ல, பெரிய மணிகள் கட்டப்பட்டிருக்கின்றன. வலிமை மிகுந்த அந்த யானைகளைப் பகைவர்களுடைய காவல் மரத்தில் கட்டிப்போடுகிறாய் நீ.

எல்லை இல்லாத வெள்ளம் போன்ற உன்னுடைய ராணுவத்தினர் எதிரி நாடுகளுக்குள் புகுந்து முன்னேறும்போது, அங்கே உள்ள ஆழமான நீர் கொண்ட குளங்களின் கரைகளை உடைத்துத் தண்ணீரைக் கலங்கடிக்கிறார்கள்.

இப்படி அணிவகுத்துச் செல்லும் உனது படை, ஒரு நடமாடும் கோட்டையைப்போல் தெரிகிறது:

 • அந்தப் படையின் வெளியே நிற்கும் வாள்வீரர்கள்தான் கோட்டை மதில் சுவர்
 • அடுத்து நிற்கும் வேல் வீரர்கள்தான் காவல் காடு
 • கூரான முள்களைப் போன்ற அம்புகளை வேகமாக எய்யும் வில் வீரர்கள்தான் வேலி
 • சிவந்த முனைகளைக் கொண்ட ஈட்டிகள், மற்ற கூரான கருவிகளைக் கொண்ட வீரர்கள்தான் அகழி

இந்தப் பிரமாண்டமான படையோடு முன்னேறிச் சென்று நீ எதிரி நாட்டுக்குள் நுழைகிறாய். பாசறை அமைத்துத் தங்குகிறாய். போருக்குத் தயாராகிவிட்டாய். மழைக்கால இடியைப்போல் உன் முரசு ஒலிக்கிறது.

ஆனால், உன் எதிரி மன்னர்கள்தான் பாவம், உன்னுடைய காலாட்படை வீரர்களைக்கூடச் சந்திக்கத் தைரியம் இல்லாமல் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள். உன் வீரத்துக்கு இணையாக ஒருவர்கூட இல்லையா? ஆச்சர்யம்தான்!

துக்கடா

 • இந்தப் பாடலில் அந்தக் காலக் கோட்டைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் /architecture / structure அழகாக விவரிக்கப்பட்டுள்ளது  – முதலில் மதில் சுவர், அதற்குள் ஒரு காவல் காடு, அப்புறம் வேலி, கடைசியாக அகழி. இந்த நான்கு அம்சங்களையும் நான்கு வகைப் படைகளுக்கு உவமையாக்குகிறார் புலவர்
 • அடுத்த நாட்டுக்குள் படையெடுத்துச் செல்லும்போது அங்குள்ள காவல் மரத்தில் தன்னுடைய யானையைக் கட்டுவது, அந்த ஊர்த் தண்ணீர்க் குளங்களை உடைத்து நாசமாக்குவது போன்றவை அன்றைய மரபு – எதிரியைக் கோபப்படுத்துவதற்காகச் செய்யும் சீண்டல்கள் இவை
 • ஆனால் ‘இத்தனை சீண்டியபிறகும், எதிரிகள் உன்னோடு மோதத் தைரியம் இல்லாமல் ஓடி ஒளிகிறார்களே!’ என்று இந்தப் பாடல் ஆச்சர்யப்படுகிறது

030/365

Advertisements
This entry was posted in பதிற்றுப்பத்து, புறம், போர்க்களம், Uncategorized. Bookmark the permalink.

8 Responses to நடமாடும் கோட்டை

 1. சுப. இராமனாதன் says:

  பாட்டுக்கு உரை எழுதிவிட்டீர்கள். புலவரின் பெயருக்கு உரை எப்போது எழுதுவீர்கள்? 🙂

  • என். சொக்கன் says:

   குறும்பர் ஐயா நீர் – இந்த கமெண்டை ரொம்ப ரசித்தேன் 🙂 பாராட்டுகள்!

 2. மிக மிக தெளிவான விளக்கம் . தமிழ் இனி மெல்லச் சாகும் என்று சொல்பவர்களிடம் காண்பிப்பேன் உமது ஆர்வத்துடன் கூடிய சேவையை. வாழ்க தமிழ்….

  • என். சொக்கன் says:

   நன்றி. இணையத்தில் பலர் சிறப்பாக இதுபோன்ற பணிகளைச் செய்கிறார்கள். அதுபோல் என்னுடைய முயற்சியும். விசேஷம் ஏதுமில்லை!

 3. யதுபாலா says:

  அருமை…!

 4. கடைசி வரைக்கும் டீ இன்னும் வரல! :-/ ‘புலவரின் பெயர் மொழிபெயர்ப்பு’

 5. anonymous says:

  // புலவரின் பெயருக்கு உரை எப்போது எழுதுவீர்கள்?//
  //கடைசி வரைக்கும் டீ இன்னும் வரல! :-/ ‘புலவரின் பெயர் மொழிபெயர்ப்பு’//

  காப்பியாற்றுக் காப்பியனார்:
  இவரு எந்தக் காபியும் ஆத்தல!:)

  “காப்பியாறு” என்பது இன்றைய மைசூருக்கு அருகில் உள்ள கபினி ஆறு!
  இது காவிரியோடு கலக்கும் ஆறு!
  T.Narasipura என்ற இடத்தில் கலக்கும்! T(irumukkoodal).Narasipuram அழகான ஊர்! பெங்களூரில் இருந்து போய் வரலாம்!
  இயற்கை எழில் கொஞ்சும் ஹொய்சாள தேசம்! சோமநாதபுரம் சிற்பங்களும் அருகில் தான்! சங்ககாலத்தில் இது குடமலை நாடு!

  இந்த காப்பியாற்றூர் -இல் பிறந்த கவிஞர்; இவருக்கு காப்பியன்-ன்னு பேரு! தொல்காப்பியன், நல்காப்பியன் போல, இவரு காப்பியன்!
  சேரனைப் பாடி நாப்பது லட்சம் பொன் பரிசா வாங்குனவரு! (பதிற்றுப்பத்து)
  காப்பியாற்றுக் காப்பியன் = இப்போ புரிஞ்சிருக்கும்-ன்னு நினைக்கிறேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s