தித்தித்திருக்குமோ?

கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ,

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்கும்மோ,

மருப்பொசிந்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே!

*

சந்திர மண்டலம்போல் தாமோதரன் கையில்

அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில்

மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,

இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே!

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம்

பாடியவர்: ஆண்டாள்

சூழல்: கண்ணன் கைகளில் இருக்கும் சங்கைப் பார்த்து ஆண்டாள் பாடுவது

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

கடலில் பிறந்த வலம்புரி வெண்சங்கே,

நீ எந்நேரமும் கண்ணனின் உதட்டோடு ஒட்டியிருக்கிறாயே, அவனுடைய வாய்ச்சுவை, மணம்பற்றி உன்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசை எனக்கு.

என் கண்ணனுடைய திருப் பவளச் செவ்வாயில் கற்பூர வாசனை மணக்குமோ? தாமரைப்பூவின் சுகந்தம் வீசுமோ? தித்திக்குமோ?

அந்தக் கண்ணன் கைகளில் சந்திர மண்டலம்போல் நிரந்தரமாக உட்கார்ந்திருக்கிறாய், அவனை எப்போதும் பிரியாமல் அவனுடைய காதுகளில் மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கிறாய், உனக்குக் கிடைத்திருக்கும் இந்தச் செல்வத்துக்கு இந்திரன்கூட இணையாகமாட்டான்!

துக்கடா

029/365

Advertisements
This entry was posted in ஆண்டாள், கண்ணன், காதல், திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பெண்மொழி, வர்ணனை. Bookmark the permalink.

26 Responses to தித்தித்திருக்குமோ?

 1. G.Ragavan says:

  வழக்கமா தோள் கண்டார் தாள் கண்டார்னு பாடுவாங்க. ஆண்டாளம்மா இதழ் கண்டார் இதழே கண்டார் போலும். 🙂

 2. G.Ragavan says:

  நாற்றம் என்பது நறுமணம்தான். நாற்றத்துழாய்னுதானே சொல்றாங்க. தெனமும் அண்டா அண்டாவா முன்னாடி தீர்த்தம் வெக்கிறாங்க. பச்சக்கருப்பூரம் கரைச்சிருக்கு. அத மவுத்வாஷா பயன்படுத்துறாரோன்னு ஆண்டாளம்மாவுக்கு ஒரு ஐயம் போலும் 🙂

  • என். சொக்கன் says:

   🙂 நாற்றம் = இனிய மணம் என்றால் பலர் நம்ப மறுக்கறாங்க, காலத்தின் கோலமுங்கோ!

 3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீ கோதை! 🙂

  இது ஆண்டாள் பாடிய வாரணமாயிரத்துக்கு அப்பறம் வரும் பாட்டு! அதாச்சும் கல்யாணத்துக்கு அப்பறம்! That means….அச்சோ…வெக்கமாய் இருக்கு! 🙂
  கனாக் கண்டேன் தோழி நான்-ன்னு பாடியவ, கண்ணாலம் முடிஞ்சி…முதலிரவுக்குச் செல்லும் இடைப்பட்ட வேளையிலே….இப்படியெல்லாம் யோசிக்கறா! 🙂

  என்னா-ன்னு?

  • என். சொக்கன் says:

   அருமையான விளக்கவுரைக்கு நன்றி நண்பா, நும் தமிழுக்கு என்ன கைமாறு செய்வது? :>

 4. ஐயோ! ரொம்பத் தான் மெதப்பா வந்தானே பந்தலுக்கு! காளை புகுதக் கனாக் கண்டேன்-ன்னு…அவன் வந்ததே தெரியல! திடீர்-ன்னு மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத…கைத்தலம் பற்ற, அம்மி மிதிக்க, குங்குமம் அட்டித்து,
  இதோ….புகுந்த வீட்டுக்கும் வந்தாச்சு! ஒரே குறுகுறுப்பா இருக்கே!….

  இம்புட்டு நாள், அவன் நினைப்பிலேயே ஏங்கி ஏங்கிக் காலந் தள்ளினேன்! அவன் முகத்தைக் என் நெஞ்சிலேயே வரைஞ்சி வரைஞ்சிக் கற்பனையில் பார்த்ததோட சரி!

  இன்னிக்கி காலையில், அத்தனை பேர் முன்னாடி, திடீர்-ன்னு வந்து கைத்தலம் பிடிச்சிட்டான்! அத்தனை பேர் முன்னாடி, அவனைச் சரியாப் பார்க்கக் கூட முடியலை! ஒரு பொண்ணு எப்படி பொதுவில் வச்ச கண்ணு வாங்காமப் பார்ப்பேன்?

  பாவி….ரெண்டு நாள் முன்னாடியே வந்திருந்தா, அவன் கிட்டக்க பேசும் வாய்ப்பு கிடைச்சிருக்கும்! அவன் அருகாமை ஒரு பழக்கத்தைக் குடுத்திருக்கும்! இப்படித் திடீர்-ன்னு வந்து அபகரிச்சா….?
  அவன்….அவன்….அவன்….கிட்டக்கப் போனா…..கிட்டக்கப் போனா…எதை முதலில் பார்ப்பேன்…..?

 5. பார்ப்பதா?….அவன் கிட்டக்கப் போகும் போதே ஒரு மணம்….என் அவனின் வியர்வை நீரோ? துழாய் நீரோ? இல்லையில்லை….

  கருப்பூரம் நாறுமோ? = முதலில் மூக்குக்கு இன்பம்!
  கமலப்பூ நாறுமோ? = தாமரை வாசம் அதிகம் இல்லை! ஆனா வடிவு! கண்ணுக்கு இன்பம்!

  திருப்பவளச் செவ்வாய் = ச்சீ…அடுத்து வாய்க்கு இன்பமோ?

  இல்லையில்லை! மூக்குக்கு, கண்ணுக்கு, வாய்க்கு-ன்னு தனித்தனியாப் பிரிக்க வேணாம்! அத்தனை இன்பமும் வாய்க்கே ‘வாய்’க்கட்டும்!

  கருப்பூர மணம் = அவன் வாயில், அவ்வாயே என் வாயில்!
  கமலப்பூ மணம் = அவன் வாயில், அவ்வாயே என் வாயில்!
  பவளச் செவ்வாய் மணம் = அவ்வாயே என் வாயில்!

 6. பவழம் துவர்க்கும்-ன்னு சொல்வாங்களே! ஆமாம்…லேசா துவர்க்குது! ஆனாலும் நல்லா இருக்குது!

  பவழத்துக்கு மணம் இல்ல! துவர்ப்பு!
  தாமரைக்கு லேசா மணம்! தண்டைத் தின்னலாம்!
  கருப்பூரம் மிகுந்த மணம்! கலந்து குடிக்கலாம்!

  இப்படிப் பல்சுவை, பல்மணமா இருக்கே! = வாய்ச் சுவை + நாற்றம்!
  ஒரே மயக்கமா வருதே!
  அடேய் சங்கரையா! சங்கே! நீ எப்படித் தான் இவனை இம்புட்டு நாள் சமாளிச்சியோ! நான் எப்படிச் சமாளிக்கப் போறேனோ? விருப்புற்றுக் கேட்கிறேன்! எனக்கும் கொஞ்சம் சொல்லேன்! அவன் நாற்றச் சுவையை நான் எப்படிச் சமாளிப்பது? சொல் சங்கே சொல்!

 7. காதல் சுவைக்கு நடுவே, கொஞ்சம் தமிழ்ச் சுவை…
  கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
  = உவம உருபு! கருப்பூரம் போல் நாறுமோ? கமலப்பூ போல் நாறுமோ? ஆனால் ‘போல்’ என்னும் உவம உருபு தொக்கி வருவதால்….உவமைத் தொகை!

  இன்னிக்கி தித்திப்பது நாளைக்குத் திகட்டிறலாம்!
  அதனால் தான்….இன்று தித்தித்து+நாளையும் இருக்குமோ = தித்தித்து + இருக்குமோ-ன்னு கேக்குறா!:)

  சொல்லாழி வெண்சங்கே = ஏ, ஆழியில் (கடலில்) பிறந்த சங்கே சொல்லு-ன்னு பொருள் எடுத்துக்கலாம்! ஆனால் அதுவல்ல!
  காதலில் ஊறி ஊறி இருக்கும் ஒரு நெஞ்சத்துக்குத் தான் அந்தப் பொருள் புரியும்!

  சொல்லாழி! = அவன், சொல்லைப் பேசும் போது, அவன் வாயில் இருந்து சுரக்கிறதே, நுரை நுரையாக, அந்தக் கடல்….அந்த தித்திப்பான “சொல் ஆழியில்” தினமும் முங்கி எழும் சங்கே…..விருப்புற்றுக் கேக்குறேன்…
  ஐயோ….இன்னும் சில நொடிகளில் அவன் கிட்ட போய் விடுவேனே! தித்தித்திருக்குமோ? தித்தித்திருக்குமோ?

  படக்-படக் என்று நெஞ்சு அடித்துக் கொள்கிறது….எனக்கும் தான்!

 8. இப்போ….முதல்வன் இராகவனுக்கும், பிறருக்கும், பதிவின் ஆசிரியருக்கும் ஒரு கேள்வி!:)

  அடுத்த பாட்டில்…
  //அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே//-ன்னு சொல்லுறாளே! பொருட் குற்றம் ஆகாதா? இல்லை அவளுக்குப் போதையா?:)

  பொதுவா, அவன் தான் சங்கு ஊதுவான்! அது மத்தவங்களுக்கு எல்லாம் கேக்கும்! அந்தச் சத்தம் கேட்டுச் சிலருக்குப் பயம், சிலருக்கு இன்பம்!
  ஆனா…. இங்கே, அவன் செவிக்கு, அவனே சங்கு ஊதிக்குவானா? என்ன பேத்தறா இந்த லூசுக் கோதை? Nonsense of the stupid of the Andal! Tell me why? :))

  • Yogi Yogi says:

   ”காதுகளில் மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கிறாற் போலும்” என்று தான் வருகிறது. அளவுக்கு அதிகமாக பொருள் பிரித்தால் சுவை குறைந்து விடும்.

   • முதலிரவில் அளவேது-ங்க? :))

    //காதுகளில் மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கிறாற் போலும் என்று தான் வருகிறது//

    அதத் தான் கேக்குறேன்!
    ஒரே நேரத்தில் எப்படிச் சங்கு வாயிலும் காதிலும் இருக்கும்?:)
    மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கு-ன்னா அவன் வாயில் ஊதுறான்-ன்னு தானே பொருள்?
    வாயில் இருக்கும் சங்கு, எப்படிக் காது கிட்டக்க போயி, மந்திரம் “கொள்ளும்”?:)

 9. amas32 says:

  How can we even attempt to comment after reading the beautiful commentary by KRS? Great job both of you!
  amas32

  • என். சொக்கன் says:

   மிகவும் உண்மை. மனிதர் அசத்துகிறார்! ‘இளம் வாரியார்’ என்று ஒரு பட்டம் கொடுத்துவிடலாமா?

   • Vijay says:

    Stunning commentary by KRS.
    Chokkan, why “இளம்?!!”

   • என். சொக்கன் says:

    :> வாரியாரோட ஒப்பிடும்போது அவர் ‘இளம்’தானே டாக்டர்? 😉

 10. யதுபாலா says:

  அலைகளின் பாஷை பேசிடும் சங்கே…! என்று இதற்க்கு பொருள் கொள்வோமா..??

  • அழகான நோக்கு! அலைமொழி பேசும் சங்கு! 🙂
   அவள் திருமொழி தொட்டனைத்தூறும் மணற்கேணி! பாருங்க! விதம் விதமாய்ச் சுரக்கிறது!

  • என். சொக்கன் says:

   ஓ, விரிவுரை நம் கற்பனையில்தான் உள்ளது 🙂

 11. சரி, சொக்கன் வரதுக்குள்ளாற நாம பதிலைச் சொல்லிப் பரிசை வாங்கிக்குலாம்!

  சங்கு, வாயில் வைத்து ஊதினால் தான் ஒலி எழுப்பும்-ன்னு இல்லை! காது கிட்டக்க கொண்டு போய் வச்சிப் பாருங்க! ம்ம்ம்ம்ம்ம்-ன்னு ஒரு ஒலி எழுப்பும், காற்று நுழைந்து!
  அதான் ஊதாத சங்கொலியைப் பிரணவ நாதம்-ன்னு சொல்லுவாய்ங்க! ஓ…ம்ம்ம் என்பது போல் ஒலிக்கும்!

  அதைத் தான் கோதை இந்தப் பாட்டில் காட்டுறா!
  * அவன் வாயில் வைத்து ஊதும் போது = அவனின் சுவையான எச்சிலை (அதரம் மதுரம்) பருகுகிறது!
  * அவன் கையில் சங்கு-சக்கரமாய் நிற்கும் போது = சங்கின் வாய்ப்புறம் அவன் காதுக்கருகே படுமாறு நின்று கொள்கிறது!

  ஊதும் போது அவன் எச்சிலைச் சுவைத்து, பின்னர் அந்த போதையில், அவன் காதருகே சென்று முனகும்…ஏய் சங்கே…
  அவன் பின் கையில் ஏறி…அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும்???

  இப்படி வாய்க்கும் காதுக்குமாய் மாறி மாறிப் பயணித்து இன்பம் அனுபவிக்கிறாயே…அந்த இந்திரனும் உன்னுடைய செல்வத்துக்கு ஏலானே!…நீ ரொம்ப குடுத்து வச்ச சங்கு தான்!-ன்னு சொல்லுறா தோழி 🙂

  நானும் அதே போல் இந்தச் சங்கரையனை (சங்கை) வேண்டிக் கொள்கிறேன்!
  உன்னைப் போலவே எனக்கும் “செல்வம்” வாய்க்க வேணுமாய்த் தொழுகிறேன்! சங்கரையா உன் “செல்வம்” சால அழகியதே!

  • யதுபாலா says:

   யாழ் இனிது,குழல் இனிது,தோழியின் அன்பு இனிது…..KRS-ன் உவமையும் இனிது இனிது…!

 12. சங்கரையன் செல்வம் மட்டும் இல்லை எமது சங்கர்-ஐயன் அறிவுச் செல்வமும் அனுபவச் செல்வமும் சால அழகியதே! 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s