கண்டேன் சீதையை

எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல் தன்

மொய்கழல் தொழுகிலன்; முளரி நீங்கிய

தையலை நோக்கிய தலையன், கை கொடு

வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.

*

திண்திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்

’வண்டு உறை ஓதியும் வலியள்; மற்று இவன்

கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று’ எனக்

கொண்டனன், குறிப்பினால் உணரும் கொள்கையான்.

*

’கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்

தெண்திரை அலை கடல் இலங்கைத் தென்நகர்;

அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்

பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்.

நூல்: கம்ப ராமாயணம் (சுந்தரகாண்டம், திருவடி தொழுத படலம்)

பாடியவர்: கம்பர்

சூழல்: சீதையைத் தேடிச் சென்ற அனுமன் திரும்பி வருகிறான்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

அனுமன் திரும்பி வந்துவிட்டான்.

ராமனைப் பார்க்கும்போதெல்லாம் உடனே வணங்குவது அனுமனின் வழக்கம். ஆனால் இப்போது, அவன் ராமனின் அழகான திருவடிகளை வணங்கவில்லை. அதற்குப் பதிலாக, வேறொரு பக்கமாகத் திரும்பி நின்று கைகள் இரண்டும் பூமியைத் தொடும்படி கீழே விழுந்து வணங்கினான், வாழ்த்தினான். ஏன்?

அந்தத் திசையில்தான் தாமரையை விட்டு நீங்கிய லஷ்மி, சீதா தேவி இருக்கிறாள். அதை ராமனுக்குக் குறிப்பால் உணர்த்த விரும்பினான் அனுமன்.

*

அனுமனுடைய வலிமையும் திறமையும் ராமனுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, அனுமன் இப்படிச் செய்வதைப் பார்த்தவுடனேயே ராமனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘அனுமன் சீதையைப் பார்த்துவிட்டான், அவளுக்கு எதுவும் ஆகிவிடவில்லை, அவள் நலமாகவும் தூய்மையாகவும் இருக்கிறாள்.’

*

‘கண்டேன் சீதையை (கற்புக்கு அழகானவளை)’ என்றான் அனுமன். ‘உலகத்துக்கே நாயகனாகிய ராமா, நீ இனிமேல் பழைய சந்தேக(கவலை)த்தையும் துயரத்தையும் மறந்துவிடலாம், தெளிந்த அலைகளுடன் கூடிய கடலால் சூழப்பட்ட இலங்கைத் தென்நகரத்தில் நான் சீதையை என் கண்களால் கண்டேன்!’

துக்கடா

 • Effective Communicationக்கு உதாரணமாக அடிக்கடி சொல்லப்படும் ’கண்டேன் சீதையை’ என்ற பிரபலமான சொற்றொடர் கம்ப ராமாயணத்தில் இல்லை. அனுமன் வாயைத் திறப்பதற்கு முன்பாகவே விஷயத்தைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறான் – ரிஸல்ட் பார்க்கப் போன மாணவன் வாயெல்லாம் சிரிப்போடு திரும்பி வந்ததுபோல
 • அனுமனைப் பார்த்தவுடன் ’சீதைக்கு எதுவும் ஆகிவிடவில்லை’ என்று ராமன் ஏன் நினைக்கவேண்டும்? அனுமன் ஏன் தன் பாட்டில் ‘ஐயம்’ (சந்தேகம்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தவேண்டும்? முந்தின பாடலில்தான் சீதை இறந்திருப்பாளோ (’மாண்டனள் அவள்’) என்று கவலைப்படுகிறான் ராமன், ஆகவேதான் அனுமன் இலங்கை இருக்கும் திசை நோக்கி வணங்கியதும் நிம்மதி அடைகிறான்
021/365
Advertisements
This entry was posted in அனுமன், கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், ராமன். Bookmark the permalink.

5 Responses to கண்டேன் சீதையை

 1. இந்த பா-க்குச் சிறப்பு நன்றி சொக்கன் (ஐயா?) 🙂

  இராகவனுக்குச் சீதையின் மென்மையுள்ளம் நன்றாகத் தெரியும்! அவள் தன்னைப் பிரிந்து இத்தனை மாதம் உயிர் தரித்து இருப்பாளோ?-என்ற ஐயமே இராகவனுக்கு!
  அதை மெய்ப்பிக்கும் விதமே போல், அனுமன் மரக்கிளையில் கண்ட காட்சி…சீதை தற்கொலைக்கு முயல்வது!

  இவள் ஒரு பேதை! என்ன தான் படித்தவள், புத்திசாலி, அரசன் மகள் என்றாலும்….மிகுந்த காதல் உள்ளம் கொண்டவள்! அதனால், அவனை அதிக நாள் பிரிந்திருக்க முடியவில்லை!

  இன்று போல் கூகுள் சாட்டோ, ட்விட்டரோ எல்லாம் இல்லை, சங்கேதமாகப் பதிவு செய்து வைக்க, அதை இன்னொருவர் கண்டு, புலனாய்வுக்குச் சொல்லி…இதெல்லாம் கிடையாது!
  இருக்கும் இடமோ, சேதியோ ஒன்னுமே தெரியாமல், எத்தனை காலம் தான் ஒரு பேதை ஏங்குவாள்?

  இதை இராகவன் நன்றாக உணர்ந்தே வைத்துள்ளான்!
  அவள் உயிரின் பாற்பட்டு வந்த ஐயமே அன்றிக் கற்பின் பாற்பட்டு அல்ல!
  இல்லீன்னா…சுக்ரீவன் காட்டுப் பங்களாவில் தங்க அழைத்த போது, அவள் இல்லாமல் எனக்கு இது போன்ற வாழ்க்கை வேணாம் என்று சொல்லுவானா? – “யாழிசை மொழியோடு அன்றி யானுறை இன்பம் என்னோ?”

  இது போன்ற ஒரு அன்னோன்னியக் காதல் இணைகள்! அதை உணர்ந்து கொண்ட அனுமன்…
  அவள் “உயிருடன்” இருக்கும் சேதியை உணர்த்தி + சொல்லி, அந்த “உயிர் ஐயத்தை”ப் போக்குகின்றான்!

  கற்பு ஐயம் எல்லாம் பின்பு தான்!
  அதுவும் ஐயம் இல்லை! ஊருக்கு மெச்ச. இராகவன் கொச்சைப்பட்டுப் போனான்!

  பின்னாளிலே அக்னிப் பரீட்சைக்கு ஆளாகப் போகின்றோம் என்றே தெரியாமல்
  இன்னாளிலேயே அசோக மரத்தடியில்..அக்னிப் பரீட்சைக்கு நொடிப்பொழுதும் ஆளாகி…
  ராகவா ராகவா என்று பேதலித்து
  ஆவி காத்து இருக்கிறாள்!
  ஆவி காத்து இருக்கிறாள்!

  • என். சொக்கன் says:

   ’ஐயா’ல்லாம் எதுக்கு? சும்மா ‘பையா’ன்னே கூப்பிடுங்க, உங்க முருகாவைக் கூப்பிடறமாதிரி :>

   நானும் உங்களை அப்படியே கூப்பிடறேன் – உங்க விளக்கம் அட்டகாசமா இருக்குது பையா :>

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 2. //Effective Communicationக்கு உதாரணமாக அடிக்கடி சொல்லப்படும் ’கண்டேன் சீதையை’ என்ற பிரபலமான சொற்றொடர் கம்ப ராமாயணத்தில் இல்லை//

  இது இராமாயண நாடகங்கள், தெருக்கூத்துகளில் உள்ளது!
  கம்ப ராமாயணத்திலும் “ஒருவாறு” உளது!
  எப்படி-ங்கறீங்களா? நீங்க குடுத்த பாட்டையே பாருங்க!

  முதலில் திசை நோக்கி வணங்கிக் குறிப்பால் உணர்த்தினாலும். அனுமன் வாய் திறந்த போது வந்த முதல் வார்த்தை என்ன?
  நான் அங்க போனேனா, எம்புட்டுச் சிரமப் பட்டேன் தெரியுமா, அப்பறமா….ன்னு எல்லாம் ஆரம்பிக்கவில்லை!:)
  என்ன சொல்லித் துவங்குகிறான்? = “கண்டேன்!”

  >கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்<

  கண்டேன் சீதையை = கண்டனன் கற்பினுக்கு அணியை!

  கற்பினுக்கு அணியை-ன்னு துவங்கி இருக்கலாமே! ஆனால் அப்படித் துவங்காமல்…
  கண்டனன் = முதற் சொல்! பாதி உயிர் வந்தது இராகவனுக்கு!
  கற்பினுக்கு அணியை = மீதி உயிரும் வந்தது!

  காதல் உள்ளப் பேதை மரணித்தால் கூட ஓரளவு மனசு அடங்கும்!
  ஆனால் சிங்கள இராணுவம் போல், பெண்ணைச் சீரழித்து மாண்டாள் என்றால்…மனம் ரொம்ப பேதலிக்கும்!
  அதான் கற்பினுக்கு அணியை என்று சொல்கிறான் = சிங்கள இராணுவம் போல் சீரழிந்து சாகாமால்…கற்புப் பொலிவோடு உயிருடன் இருக்கிறாள்! அதையே உணர்த்தும் அனுமன்!

  So, "கண்டேன் சீதையை" வாசகம் உண்டு! கண்டேன் சீதையை = கண்டனன் கற்பினுக்கு அணியை!

  • என். சொக்கன் says:

   உண்மை – ’கண்டேன் சீதையை’ உண்டு என்கிற அர்த்தத்தில்தான் தலைப்பு, பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன், அந்தச் சொற்றொடர் அப்படியே (explicitஆக) இல்லை என்று குறிப்பிட்டேன், நம்மைப்போல் விளக்கம் எழுதுவோர் உண்டாக்கியது

 3. 1. கண்டனென் = முதல் மகிழ்ச்சிச் சேதி
  2. கற்பினுக்கு அணியை = எதிரியால் சீர் குலையாமல், அதனால் உயிரோடு இருக்கிறாள்!

  3. கண்களால் = யார் மூலமாகவோ கேள்விப்படாமல்…நானே என் கண்களால் கண்டேன்!
  4. தெண்திரை அலை கடல் இலங்கைத் தென்நகர் = இடம் எங்கே-ன்னு சொல்லியாச்சி! அந்த இடத்துக்குப் போகணும்-ன்னா கடலைக் கடக்கணும் என்பதையும் சொல்லியாச்சி!

  5. இனி, துறத்தி ஐயமும், பண்டு உள துயரும்’ = சந்தேகம் வந்தா துயரமும் கூடவே வரும்! சாந்தமு லேகா செளக்கியமு லேது!
  அதான் முதலில் ஐயம் துற-ன்னு சொல்லி, அப்பறம் துன்பம் துற-ன்னு சொல்லுறான்!

  6. என்று அனுமன் பன்னுவான்.= இப்படி பலப்பல சேதிகளையும் 140 எழுத்தகளில் சொல்லிய அனுமனை ஒரு நல்ல ட்வீட்டர் எனலாமா? சொல்லின் செல்வன்! அவன் சொல்லி…துன்ப எமனும் செல்வன்!

  அன்று இரு உள்ளங்களைச் சேர்த்து வைத்தது போல், இன்றும் சேர்த்து வைக்குமாறே….
  அனுமன் (எ) சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s