நோய் செய்தவன்

அறியாமையின் ‘வெறி’ என மயங்கி

அன்னையும் அரும்துயர் உழந்தனள்; அதனால்

எய்யாது விடுதலோ கொடிதே – நிரைஇதழ்

ஆய்மலர் உண்கண் பசப்பச்

சேய்மலை நாடன் செய்த நோயே!

நூல்: ஐங்குறுநூறு (#242)

பாடியவர்: கபிலர்

சூழல்: குறிஞ்சித் திணை – ஒரு பெண் காதல்வயப்பட்டாள், அதனால் அவள் உடம்பில், பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்ட தாய் பதறுகிறாள், ’மகளுக்கு ஏதோ ஆகிவிட்டது’ என்று நினைக்கிறாள், இதை அந்தப் பெண்ணிடம் சொல்கிறாள் தோழி

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

தோழி, உன்னுடைய கண்கள் அழகான இதழ்களைக் கொண்ட மலர்களைப் போல் சிரிக்கும், ஆனால், அந்தக் கண்கள் இப்போது ஒளியிழந்துவிட்டன.

உன் தாய் பாவம், இதைப் பார்த்துவிட்டுப் பதறுகிறாள், ‘என் மகளுக்கு என்ன ஆச்சு?’ என்று தவிக்கிறாள், ‘பித்துப் பிடித்துவிட்டதோ? சாமி குத்தமோ? பூசாரியை அழைத்துப் பரிகாரம் செய்யவேண்டுமோ?’ என்றெல்லாம் விதவிதமாகக் கற்பனை செய்கிறாள்.

இனிமேலும் அவளைக் கலங்கவிடுவது நியாயம் இல்லை, அழகிய மலைப்பகுதிகளைச் சேர்ந்த உன்னுடைய காதலனால்தான் இந்த நோய் ஏற்பட்டது என்கிற உண்மையை அவளுக்குச் சொல்லிவிடு.

020/365

Advertisements
This entry was posted in அகம், ஐங்குறுநூறு, கபிலர், காதல், குறிஞ்சி, தோழி, பெண்மொழி. Bookmark the permalink.

One Response to நோய் செய்தவன்

 1. GiRa ஜிரா says:

  குறிஞ்சி என்றால் கபிலர். கபிலர் என்றால் குறிஞ்சி.

  அந்த அளவுக்குக் குறிஞ்சியில் பாடல்கள் எழுதியிருக்கிறார் கபிலர்.

  ஐங்குறுநூறு நூலில் ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள். குறிஞ்சிக்கான நூறு பாடல்களையும் இயற்றியது கபிலர்.

  அந்த நூறு பாடல்களையும் பத்து பத்தாகப் பிரித்துப் பாடியிருக்கிறார். அதில் ஒரு பத்து ”வெறிப்பத்து”.

  அதென்ன வெறிப்பத்து?

  வெறியைப் பற்றிய பத்து பாடல்கள்?

  சரி. அதென்ன வெறி?

  முருகனுக்குச் செய்யும் வழிபாடுகளில் ஒன்று வெறியாடல். பழந்தமிழர் வாழ்க்கையில் வெறியாடுவது என்பது துன்பங்களைப் போக்க இறைவனுக்குச் செய்யும் பூசையாகும்.

  சங்க இலக்கியங்களைப் படித்துப் பார்ப்பவர்களுக்கு வாழ்வியலில் இறையியல் எந்த அளவுக்கு இணைந்து இயைந்திருக்கிறது என்பது புரியும். முருக வழிபாடு மக்களிடையே இருந்த அளவிற்கு வேறெந்த வழிபாடும் கலக்கவில்லை. மன்ற (சங்க) இலக்கியங்களைக் கூர்ந்து படிப்பவர்களுக்கு இது நன்றாகப் புரியும்.

  சரி. ஐங்குறுநூறு அகப்பாடல். அதிலும் காதற்பாடல்கள். இங்கு எங்கு வெறியாடல் வந்தது?

  தலைவிக்குக் காதல் நோய். அந்த நோய் பிடித்த தலைவி தன் இயல்பு நிலை தவறி இருக்கிறாள். அதைப் பார்த்த தாய்க்கு மகளின் உடல்நிலை மேல் ஐயம். மகள் உடல்நிலை சரியாக வேண்டும் என்று முருகனுக்கு வேண்டிக் கொண்டு வெறியாடல் நிகழ்த்துகிறாள்.

  அது பற்றிய பாடல்கள்தான் வெறிப்பத்தில் வருகின்றன. இந்தப் பாடலும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

  அதைத்தான் பாடலின் தொடக்கமும் சொல்கிறது.

  அறியாமையின் ‘வெறி’ என மயங்கி
  அன்னையும் அரும்துயர் உழந்தனள்

  காதல் நோயில் மகள் வீழ்ந்திருப்பது அறியாமல் மகளுக்கு நோய் வந்திருக்கிறது என்று அச்சப்பட்டு அன்னையானவள் வேலனுக்கு வெறியாட்டு செய்து நன்மையை வேண்டுகிறாள் என்பது இதன் பொருள்.

  இந்தப் பாடலில் இன்னொரு தகவல் உள்ளது.

  தலைவனைப் பற்றிச் சொல்லும் போது “சேய்மலை நாடன்” என்று சொல்லப்படுகிறது.

  அதென்ன சேய்மலை?

  சங்க இலக்கியத்தில் முருகனைச் சேய் என்றும் குறிப்பிடுவார்கள். அந்த முருகன் இருக்கும் மலைதான் சேய்மலை என்று பொருள் சொன்னால் அது தவறு. இப்படிக் குருட்டாம் போக்கில் விளக்கங்களைத் திரித்துச் சொல்கின்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நாம் உண்மையான பொருளைத்தான் தேட வேண்டும்.

  சேய்மலை என்றால் தொலைவில் இருக்கும் மலை என்று பொருள்.

  தலைவன் தலைவி இருக்கும் மலையைச் சேர்ந்தவன் அல்லன். அவன் தள்ளியிருக்கும் வேறுமலையைச் சேர்ந்தவன். மலை விட்டு மலை வந்து காதலித்திருக்கிறான்.

  மன்றப் பாடல்களில் இப்படியான விவரங்கள் ஒளிந்திருக்கும். சரியாகக் கண்டுபிடித்துப் பொருள் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s