பெண்மை அரசு

’அஞ்சல், மட அனமே! உன்தன் அணி நடையும்,

வஞ்சி அனையார் மணி நடையும், விஞ்சியது

காணப் பிடித்ததுகாண்’ என்றான் களிவண்டு

மாணப் பிடித்த தார் மன்.

*

‘திசை முகந்த வெண் கவிகைத் தேர் வேந்தே! உன்தன்

இசை முகந்த தோளுக்கு இசைவாள் – வசைஇல்

தமையந்தி என்று ஓதும் தையலாள், மென் தோள்

அமை அந்தி, என்று ஓர் அணங்கு.’

*

‘நால் குணமும் நால் படையா, ஐம்புலனும் நல் அமைச்சா

ஆர்க்கும் சிலம்பே அணி முரசா, வேல் படையும்

வாளுமே கண்ணா, வதன மதிக் குடைக் கீழ்

ஆளுமே பெண்மை அரசு.’

நூல்: நளவெண்பா (#16, 17 & 20)

பாடியவர்: புகழேந்திப் புலவர்

சூழல்: நிடத நாட்டு அரசன் நளன். அவனுடைய தோட்டத்தில் ஓர் அன்னம் தென்படுகிறது. அதைப் பிடித்துவரச் சொல்கிறான் நளன். பயத்தில் நடுங்குகிறது அன்னம்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)

நளன் கழுத்தில் ஒரு மலர் மாலை. அதில் ஏகப்பட்ட வண்டுகள் தேனை உறிஞ்சிக் குதூகலித்துக்கொண்டிருந்தன.

‘இளைய அன்னமே பயப்படாதே’ என்றான் நளன். ‘நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். உன்னுடைய நடையை எல்லோரும் சிறப்பாகப் புகழ்ந்து சொல்கிறார்கள். அது அழகா, அல்லது வஞ்சிக்கொடி போன்ற பெண்களின் நடை அழகா என்று தெரிந்துகொள்வதற்காகதான் உன்னைப் பிடித்துவரச் சொன்னேன்.’

அன்னத்துக்கு நிம்மதி. இந்த அரசனிடமிருந்து தப்பிப்பதற்காக ஓர் உபாயம் செய்தது. தமயந்தி என்பவளைப் பற்றி வர்ணித்துப் பேச ஆரம்பித்தது. ‘அரசே, எட்டுத் திசைகளிலும் உன்னுடைய தேர், வெண்கொற்றக் குடையின் புகழ் பரவியிருக்கிறது, உன் தோளுக்கு ஏற்ற ஒருத்தியை நான் அறிவேன்.

’அவள் பெயர் தமயந்தி, மூங்கில் போன்ற மென்மையான தோள்களைக் கொண்டவள், குறை சொல்லமுடியாத அழகி!’

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற நான்கு குணங்கள்தான் அவளுடைய நான்கு வகைப் படைகள். கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்து புலன்களும் அவளுடைய அமைச்சர்கள், சத்தமிடும் சிலம்புதான் அவளுடைய முரசு, இரண்டு கண்கள்தான் வேல், வாள், நிலவு போன்ற அவளுடைய அழகிய முகம்தான் வெண்கொற்றக்குடை, இவற்றின் துணையோடு அவள் தன்னுடைய பெண்மை அரசாங்கத்தை ஆட்சி செய்கிறாள்.’

துக்கடா

 • நளன், தமயந்தியின் கதை மகாபாரதத்தில் வருகிறது. இதை வெண்பா வடிவத்தில் எழுதியவர் புகழேந்திப் புலவர். அதனால் அவரை ‘வெண்பாவில் புகழேந்தி’ என்று பாராட்டினார்கள்
 • நளவெண்பா முழுவதும் உரையுடன் வாசிக்க: http://goo.gl/XYLVR
 • முதல் பாடலின் முதல் வரியில் ‘மட’ என்கிற ஒரு வார்த்தை வருகிறது. இதற்குத் தற்காலத்தில் புழங்கும் ‘முட்டாள்’ என்ற அர்த்தம் இல்லை, இளமை என்று அர்த்தம்
 • #365பா பாடல்களின் விளக்கத்தைப் படித்தபின் பாடலை இன்னொருமுறை படித்துப் பார்த்தால், சில அபூர்வமான தமிழ்ச் சொற்களைப் பொருளுடன் அடையாளம் காணலாம். உதாரணமாக: அமை (மூங்கில்), தார் (மாலை), ஆர்க்கும் (சத்தமிடும்), வதனம் (முகம்), மதி (நிலா)

018/365

Advertisements
This entry was posted in கதை கேளு கதை கேளு, நளவெண்பா, நாடகம், வர்ணனை, வெண்பா. Bookmark the permalink.

2 Responses to பெண்மை அரசு

 1. GiRa ஜிரா says:

  இந்தப் பாட்டுக்கு விளக்கம் சொன்னா சொல்லீட்டே போகலாம். ஆனாலும் நீங்க குறிப்பிட்ட சில சொற்களுக்கு மட்டும் எனக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்றேன்.

  அமை

  பரவு நெடுங்கதிர் என்ற திருப்புகழ் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இது மதுரைத் திருப்புகழ்.

  அதில் ஒரு வரி.

  அசல நெடுங்கொடி அமையுமை தன் சுத குறமகளிங்கித மணவாளா

  இந்த வரியில் அமை உமை என்று வருகிறது. அந்த மூங்கில் போன்ற தோள்களையுடைய உமையம்மையின் மகன் முருகன் என்று பொருள்.

 2. GiRa ஜிரா says:

  தார்

  தார் என்ற சொல் பல இலக்கியங்களில் வருகிறது.

  தார் என்றால் மாலை என்று பொருள். ஆனால் ஒரு வேறுபாடு. பொதுவில் தார் என்பது ஆண்கள் சூடிக் கொள்வது. மாலையானது வட்டமாக இருபக்கமும் முடி போடப்பட்டு இருக்கும். தார் அப்படியிருக்காது. சூடியவர்களின் தோள்களில் இரண்டு புறமும் தொங்கும். வாழையின் தார் கூட தொங்கிக்கொண்டுதானே இருக்கிறது.

  தார் கடம்பந்தார் எம் கடவுள் என்று முருகனைப் பற்றி இளங்கோவடிகள் எழுதியிருக்கிறார்.

  கொங்கு அலர்தார் சென்னி குளிர் வெண்குடை – இதுவும் இளங்கோவடிகள் சொன்னதுதான்

  ஆண்டாளின் கழுத்தில் இருப்பது மாலையல்ல. அது தார். திருவில்லிபுத்தூர் மன்னார் கழுத்தில் போட வேண்டிய தாரை தான் சூடிக் கொடுத்ததால் ஆண்டாள் கழுத்தில் எப்போதும் தார் தொங்குகிறது

  இந்தப் படத்தில் ஆண்டாளின் கழுத்தில் இருக்கும் தாரைப் பாருங்கள்.
  http://www.google.co.in/imgres?imgurl=http://www.aanthaireporter.com/wp-content/uploads/2012/06/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.jpg&imgrefurl=http://www.aanthaireporter.com/uncategorized/6543&h=728&w=492&sz=96&tbnid=uVkW2_CbW64FtM:&tbnh=96&tbnw=65&zoom=1&usg=__7hkFf6F3PljjsSzHMYWfh1qUNq8=&docid=DcIoFqAEi1QPhM&hl=en&sa=X&ei=0c0HUNKDMYzorQf0weXiAg&ved=0CEkQ9QEwAA&dur=1558

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s