கோத்தும்பி!

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த

நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்

மாவேறு சோதியும் வானவரும் தாம் அறியாச்

சேஏறு சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ!

*

நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை ஆர் அறிவார்

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

ஊன் ஆர் உடை தலையில் உண்பலி தேர் அம்பலவன்

தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ!

நூல்: திருவாசகம் (திருக்கோத்தும்பி #1 & 2)

பாடியவர்: மாணிக்கவாசகர்

சூழல்: வண்டுகளின் அரசனை (கோத்தும்பி) அழைத்து சிவபெருமானின் காலடிக்குச் ‘சென்று ஊதுவாய்’ என அறிவுறுத்தும் பாடல்

வண்டுகளின் அரசனே,

(தாமரை) மலரில் அமர்ந்துள்ள பிரம்மன், இந்திரன், திருமால், பிரம்மனின் நாக்கில் தங்கிய அழகிய கலைமகள், நான்கு வேதங்கள், பெருமை மிகுந்த ஒளி வடிவான ருத்திரன், மற்ற தேவர்கள் என யாராலும் அறியமுடியாதவன், காளை வாகனத்தில் ஏறும் சிவபெருமான், அவனுடைய காலடியைச் சென்று நீ வணங்குவாய்!

*

தேவர்களின் தலைவன் என்மீது கருணை வைத்தான், என்னை ஆட்கொண்டான், அவன்மட்டும் அப்படி அருள் புரியாவிட்டால் நான் என்னவாகியிருப்பேன்! என் உள்ளம், என் அறிவெல்லாம் என்ன நிலைமைக்குச் சென்றிருக்கும்! என்னை யாருக்குத் தெரிந்திருக்கும்? (நான் இன்று கற்றவை, பெற்றவை எல்லாம் அவனால் கிடைத்தது)

ஆகவே, மாமிசம் ஒட்டியிருந்த மண்டை ஓட்டில் பிச்சை பெற்று உண்கின்ற அம்பலவாணன், அவனுடைய தேன் நிறைந்த தாமரை போன்ற காலடியைச் சென்று நீ வணங்குவாய்!

துக்கடா

 • அதென்ன ‘சென்று ஊதாய்’? வண்டு சிவபெருமான் காலைப் பார்த்து விசில் அடிக்குமா? கொஞ்சம் கூகுள் பண்ணுங்கள், புரியும் 😉
 • திருக்கோத்தும்பீ பாடல்கள் முழுவதையும் உரையுடன் வாசிக்க – http://goo.gl/SGGcf
 • இந்தப் பாக்களில் சிலவற்றைத் தொகுத்து இசைவடிவம் தந்திருந்தார் இளையராஜா. அந்தப் பாடலைக் கேட்கவும், நடன வடிவத்தில் பார்க்கவும்:

013/365

Advertisements
This entry was posted in ஆண்மொழி, சிவன், திருவாசகம், பக்தி, மாணிக்கவாசகர். Bookmark the permalink.

5 Responses to கோத்தும்பி!

 1. முதல் வரியை பார்த்தவுடன் இந்த பா பிடிச்சிப் போச்சு! புரந்தரா…

 2. இளையராஜாவின் இசைவடிவம் இந்த வரிகளுடன் படிக்க மிகவும் இன்மையாக இருக்கிறது..
  உருகி எழுதும் ஒரு வரி இது, இந்த ‘பா’ வை பதிவு செய்தமைக்கு நன்றி

 3. GiRa ஜிரா says:

  இந்தப் பாட்டிற்கு விளக்கம் சொல்லும் போது பொதுவாக எல்லோரும் எளிதாக மறந்து/மறைத்து விடும் விவரம் ஒன்று உள்ளது. அதைச் சற்றே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

  பாடலின் மையக்கருத்து என்ன?

  பெரிய பெரியவர்களுக்கெல்லாம் எட்டாப் பரம்பொருளாக இருக்கும் சிவனின் அரும் பெரும் சிறப்புகளை எடுத்துச் சொல்வாய் தும்பியே என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

  யாரெல்லாம் அந்தப் பெரியவர்கள்?

  பூவேறு கோனும் – தாமரை மலர் மீது அமர்ந்துள்ள நான்முகனும்
  புரந்தரனும் – இந்திரனும்
  பொற்பமைந்த நாவேறு செல்வியும் – அழகு நிறைந்த கலைமகளும் (நான்முகனின் நாவில் கல்விச் செல்வமாய் அமர்ந்தவள் கலைமகள்)
  நாரணனும் – நாராயணனும்
  நான்மறையும் – நான்கு மறைகள் என்று சொல்லப்படுகின்றவைகளும்
  மாவேறு சோதியும் – பெருமை ஏறிய(நிரம்பிய) உருத்திரனும்
  வானவரும் – விண்ணவர்களும் (தேவர்கள்)

  இவர்கள் எல்லாம் அறியாததாக உள்ளது சேவேறு சேவடி. அதாவது எருது மேல் ஏறியமரும் சிவனாரின் திருவடிகள்.

  அந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை நன்றாகப் பார்த்தால் நான் சொல்ல வருவது விளங்கும்.

  மூன்று தொழில் புரிகின்றவர்களும் அந்தப் பாட்டில் இருக்கிறார்கள்.

  பூவேறு கோன், நாரணன் மற்றும் மாவேறு சோதி

  அதாவது நான்முகன், நாராயணன், மற்றும் உருத்திரன்.

  உருத்திரன் வேறு. சிவன் வேறு. இதுதான் சைவம் சொல்வது.

  ஐந்து தொழில்களாகவும் அவைகளை நடத்துகின்றவராகவும் அனைத்தையும் கடந்தும் அனைத்து பொருட்களுக்கு உள்ளும் இருக்கும் பரம்பொருளே சிவன்.
  இந்தக் கருத்தை பல பாடல்களில் காணலாம். மாணிக்க வாசகரும் இந்தக் கருத்தை இந்தப் பாடலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

 4. சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் சொன்னேன் , “டீவீ ம்யூட்டில் இருந்தாலும் நாம் “திரைக்கு வந்த சில மாதங்களே ஆன” வை ‘அதே’ குரலில் படிக்கிறோம் என்று. அது போல் இந்த செய்யுளையும் ராஜாவின் மெட்டிற்கு தான் படிக்க முடிகிறது 🙂

  இந்த செய்யுளை படித்தால் நமக்கு எப்படி சங்க காலத்திலிருந்து சில விஷயங்கள் தொடர்ச்சியாக வந்திருக்கின்றன என்பது தெரியும். சங்க பாடல்களில், குறிப்பாக பாலை பாடல்களில், அம்பை குறிக்கும்பொழுது அதில் மாமிசம் ஒட்டிக்கொண்டிருப்பதாக பல இடங்களில் வரும் . இங்கும் “ஊன் ஆர் உடை தலையில் உண்பலி தேர் அம்பலவன்” என்று வருகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s