தங்கம் ஆன தகரம்

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது?

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

சூழல்: முற்றிலும் ‘த’கர எழுத்துகளைமட்டுமே வைத்து எழுதப்பட்ட வெண்பா இது – கீழே உள்ள ‘சுருக்’ விளக்கம் மொக்கையாகத் தோன்றுகிறதே என்று நினைக்கவேண்டாம், இதைச் சொல்வதற்காக அவர் எப்பேர்ப்பட்ட வார்த்தை விளையாட்டு ஆடியிருக்கிறார் என்பது கொஞ்சம் கவனமாகப் பிரித்தால்தான் விளங்கும் – முழு விளக்கத்தைப் படிக்கவும்

’சுருக்’ விளக்கம்: வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது?

முழு விளக்கம்:

வண்டே,

தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்

தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்

துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய்

துதைது – அடுத்த பூவுக்குச் சென்று

அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய்

தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? – நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது?

009/365

Advertisements
This entry was posted in ஆண்மொழி, காளமேகம், தனிப்பாடல், வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.

12 Responses to தங்கம் ஆன தகரம்

 1. Natarajan says:

  ஆஹா

 2. இது தெனாலி ராமன் படத்துல கூட வருது பாஸ்

  • என். சொக்கன் says:

   சுட்டுட்டாங்களா பாஸ்? அநியாயம்!

   • GiRa ஜிரா says:

    தெனாலிராமன் படத்தில் வருவது வேறுபாடல். தாதிதூதோதீது. அதைக் கவியரசர் வானம்பாடி படத்தில் ஆண்கவியை வெல்ல வந்த பெண்கவியே வருக என்ற படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்.

    பி.கு தெனாலிராமன் படத்திற்கு வசனம் கலைஞர் மு.கருணாநிதி 🙂

 3. ஓஹ் என் கடவுளே!!!

 4. அமளி துமளி பாட்டின் ஆரம்ப ராகம் போல உள்ளது.
  கேட்டுப் பாருங்கள்

 5. Pingback: கொக்கொக்கக் காக்கைக்கு… « தினம் ஒரு ’பா’

 6. GiRa ஜிரா says:

  தெனாலிராமன் படத்தில் இடம்பெற்ற தந்தகாரப் பாடலும் காளமேகம் கொடுத்ததுதான். அந்தப் பாடல்,

  தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
  தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
  துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
  தித்தித்த தோதித் திதி

  தெனாலிராமன் படத்தில் வரும் இந்தப் பாடலின் ஒலி/ஒளி வடிவம் கிடைக்கவில்லை. மெல்லிசை மன்னர் இசையில் டி.எம்.சௌந்தரராஜன் மிக அழகாகப் பாடியிருப்பார்.

  இந்தப் பாடலுக்குப் பொருள்?

  தாதிதூ தோதீது – தாதி தூதோ தீது – தாதி(பணிப்பெண்) செல்லும் தூது தீயது
  தத்தைதூ தோதாது – தத்தை தூதோதாது – தத்தை தூது ஓதாது – கிளியானது தூதைச் சிறப்பாகச் சென்று ஓதாது
  தூதிதூ தொத்தித்த தூததே – தூதி தூது ஒத்தித்த தூததே(தூது அதே) – தோழி செல்லும் தூது தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேயிருக்கும் தூதாகி விடும்
  தாதொத்த துத்தி தத்தாதே – தாது ஒத்த துத்தி தத்தாதே – பூந்தாதை ஒத்த பசலை நிறம் கொண்ட தேமல் என் மேல் படராது
  தேதுதித்த தொத்து தீது – தே துதித்த தொத்து தீது – தே(இறைவனை) துதித்துத் தொற்றிக் கொள்வதும் தீதே

  அப்போ எதுதான் நல்லது?

  தித்தித்த தோதித் திதி – தித்தித்தது ஓதித் திதி – தித்திப்பான காதலன் பெயரையே ஓதிக் கொண்டிருப்பேனாக!

  இதுதான் இந்த அழகான பாடலின் விளக்கம்.

 7. GiRa ஜிரா says:

  இந்தப் பாடலை வானம்பாடி திரைப்படத்தில் கவியரசர் சற்று மாற்றிப் பயன்படுத்தியிருக்கிறார்.

  தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது
  தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது
  தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது – இங்கு
  துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது

  இதற்குப் பொருள்?

  அடிமைத் தூது பயன்படாது, கிளிகள் பேசாது
  அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
  தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது – இளம்
  தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு

  இந்தப் பாடலின் ஒலி-ஒளி வடிவம் இங்கே இருக்கிறது. கேட்டு ரசிக்கவும். 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s