நிலா நிலா ஓடி வா

என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்

தன் சிறு கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்

அஞ்சன வண்ணனோட ஆடல் ஆட உறுதியேல்

மஞ்சில் மறையாதே மாமதீ! மகிழ்ந்து ஓடி வா!

*

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்

எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய்

வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற

கைத்தலம் நோவாமே அம்புலீ! கடிது ஓடி வா!

*

சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர் அவிழ்த்து

ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டிக்காட்டும் காண்

தக்கது அறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே

மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்!

*

அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா

மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னைக் கூவுகின்றான்

குழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்

புழை இல ஆகாதே நின் செவி புகர் மாமதீ!

நூல்: நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் (பெரியாழ்வார் திருமொழி 1-4-2 முதல் 1-4-5 வரை)

பாடியவர்: பெரியாழ்வார்

சூழல்: குழந்தைக் கண்ணனுடன் விளையாட நிலாவை அழைத்துப் பாடும் யசோதை

நிலாவே, என் சின்னப் பிள்ளை கண்ணன், எனக்கு இனிய அமுதம் போன்றவன், அவன் தன்னுடைய சின்னக் கைகளைக் காட்டி உன்னை அழைக்கிறான், அந்தக் கார்மேக வண்ணனோடு விளையாட உனக்கு ஆசை இல்லையா? ஏன் மேகத்தில் மறைந்துகொள்கிறாய்? மகிழ்ச்சியாக இங்கே ஓடி வா!

உன்னைச் சுற்றிலும் ஒளிவட்டம், உலகம் எங்கேயும் வெளிச்சத்தைப் பரப்புகிறாய், ஆனாலும்கூட, நீ என் மகன் முகத்துக்கு இணையாகமாட்டாய். வித்தகன், வேங்கடவாணன், அவன் உன்னைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கை வலிக்க ஆரம்பித்துவிடும், அதற்குள் சீக்கிரமாக ஓடி வா!

கையில் (சுதர்சனச்) சக்கரம் ஏந்திய கண்ணன், அவன் தன்னுடைய அழகான பெரிய கண்களை விரித்து உன்னையே ஆர்வமாகப் பார்க்கிறான், சுட்டிக்காட்டுகிறான், பார்! இப்போது என்ன செய்யவேண்டும் என்று உனக்குத் தெரியாதா? நீ குழந்தைகளைப் பெறாதவனா? அவற்றோடு விளையாடி மகிழாதவனா? பிடிவாதம் பிடிக்காமல் சீக்கிரம் வா!

குழந்தைக் கண்ணன் வாயில் ஊறும் அமுத எச்சில் தெறிக்க, தெளிவில்லாத மழலைச் சொற்களால் உன்னைக் கூவி அழைக்கிறான், அதைக் கேட்டும் கேட்காததுபோல் போகிறாயே, உனக்குக் காது இருந்து என்ன பலன்? அந்தக் காதுகளில் துளை இல்லாமல் போகட்டும்!

008/365

Advertisements
This entry was posted in ஆண்மொழி, ஆழ்வார்கள், கண்ணன், தாலாட்டு, திருமால், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், பக்தி, பிள்ளைத்தமிழ், பெண்மொழி, பெரியாழ்வார், Uncategorized. Bookmark the permalink.

8 Responses to நிலா நிலா ஓடி வா

 1. Yogi Yogi says:

  தெளிவான உரை!

 2. ஆரம்ப வரிகளைப் படித்ததும் ஸ்பார்க்கியது…. அடடே, பிரபந்தம் என்று! மிக்க நன்றி!
  365’ல் நிறைய பிரபந்தம் எக்ஸ்பெக்டிங் 🙂

  ஒரு கேள்வி: “என் சிறுகுட்டன்” எனும் பதத்தில் மலையாள வாடை வீசும் காரணம் என்னவோ?

  • என். சொக்கன் says:

   நன்றி 🙂

   ’குட்டன்’ என்றால் சிறியவன் – தமிழ் வார்த்தைதான், அங்கிருந்து மலையாளத்துக்கும் சென்றது – நாம் தவறவிட்டுவிட்டோம், அவர்கள் இன்னும் பயன்படுத்துகிறார்கள், அவ்வளவே வித்தியாசம்!

 3. amas32 says:

  நான் இப்பொழுது நாலாயிர திவ்யப்ரபந்தம் பயில்கிறேன். உங்கள் பதிவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தேர்ந்த தெளிவுரை. நன்றி!
  amas32

  • என். சொக்கன் says:

   மகிழ்ச்சி. ஒரு விருப்பப் பாடல் கொடுங்களேன், ‘வரி’பரப்புவோம் :)))))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s