ஏன் சண்டை?

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;

நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே; நின்னொடு

பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே;

ஒருவோர் தோற்பினும், தோற்பது குடியே

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்

குடிப்பொருள் அன்று நும் செய்தி; கொடித்தேர்

நும்மோர் அன்ன வேந்தர்க்கு

மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே!

நூல்: புறநானூறு (#45)

பாடியவர்: கோவூர் கிழார்

திணை: வஞ்சி

துறை: துணை வஞ்சி

சூழல்: நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற இரண்டு சோழ மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் போர் செய்யத் தீர்மானிக்கிறார்கள், அவர்களிடையே சமாதானம் செய்துவைப்பதற்காக இந்தப் பாடலைப் பாடுகிறார் கோவூர் கிழார்

’சுருக்’ விளக்கம்: நீங்க ரெண்டு பேருமே சோழர்கள், அப்புறம் எதுக்கு ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போடறீங்க? உங்கள்ல யார் தோத்தாலும் சோழர் குலத்துக்குதானே அவமானம்? ஊரே உங்களைப் பார்த்துச் சிரிக்குது, பேசாம சமாதானமாப் போயிடுங்க!

முழு விளக்கம்:

சோழ அரசனே, இந்தப் போர்க்களத்தில் உன்னை எதிர்த்து நிற்பது, பனம்பூ சூடிய சேரன் அல்ல, வேப்பம்பூ சூடிய பாண்டியனும் அல்ல, நீயும் ஆத்திப் பூ அணிந்திருக்கிறாய், உன்னை எதிர்த்து நிற்பவனும் ஆத்திப்பூதான் சூடியிருக்கிறான்!

போரில் நீங்கள் இருவருமே ஜெயிக்கமுடியாது, யாராவது ஒருவர் தோற்றுதான் ஆகவேண்டும், அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா?

இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள்.

துக்கடா:

 • அந்தக் காலப் போர்களின்போது யார் எந்தக் கட்சி என்று பிரித்துப் பார்ப்பதற்காக, ஒவ்வொருவரும் வெவ்வேறுவகை மாலைகளை அணிந்துகொண்டார்கள், அந்த வகையில் சேரர்கள் பனம்பூவைச் சூடிக்கொள்வார்கள், பாண்டியர்கள் வேப்பம்பூவைச் சூடிக்கொள்வார்கள், சோழர்கள் ஆத்திப்பூவைச் சூடிக்கொள்வார்கள்
 • சங்க இலக்கியத்தில் ’புறம்’ வகையைச் சேர்ந்த பாடல்கள் 12 திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்தப் பாடல் வகையாகிய ‘வஞ்சி’த் திணை – எதிரி நாட்டைப் பிடிக்கப் படையெடுத்துச் செல்வதைக் குறிக்கிறது. மற்ற திணைகளைப்பற்றி வாசிக்க நீங்கள் இங்கே செல்லலாம்:  http://goo.gl/Srnb1
 • ‘துணை வஞ்சி’ என்பது வஞ்சித் திணையின்கீழ் இடம்பெறும் ஒரு துறை, இன்னொருவரை ஜெயிப்பதற்காகக் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிற ஓர் அரசனுக்குப் புத்தி சொல்வது

005/365

Advertisements
This entry was posted in அறிவுரை, ஆண்மொழி, கதை கேளு கதை கேளு, புறநானூறு, புறம், போர்க்களம். Bookmark the permalink.

14 Responses to ஏன் சண்டை?

 1. கடைசியில் சண்டை நடந்ததா இல்லையா ?

  • என். சொக்கன் says:

   சரித்திரப் பெரியோர்களைதான் கேட்கணும், எனக்குத் தெரியவில்லை 🙂

 2. Raviaa says:

  சுருக்’ விளக்கம் : சுப்பர் ! அடுத்தது “மெட்ராஸ் பாஷையா” ?

  • என். சொக்கன் says:

   ’சுருக்’ விளக்கத்தின் நோக்கம், பாடலை இழிவுபடுத்துவது அல்ல – வர்ணனைகளோடு வாசிக்கச் சிரமப்படுகிறவர்களுக்குப் பாடலின் மையக்கருத்தைமட்டும் 2 வரியில் சொல்லிவிட்டு, அதன்பிறகு முழு விளக்கத்துக்குச் செல்வதுதான்

   • Raviaa says:

    சுருக்’ விளக்கம் : ஐயையோ நான் குறை சொல்லுல ! என்னை மாதிரி ஆளுக்கு புரியற மாதிரியருக்குன்னு சொல்ல வந்தேன் ! எனக்கு புடிச்சிருக்கு . 🙂

   • என். சொக்கன் says:

    🙂 நன்றி – புரிகிறது

 3. bmurali80 says:

  நெத்தியடி படத்தில் காத்தாடிக்காக இரு பிரிவினர் இடையில் சண்டை நடக்கும். நடுவில் ஒருவர் தலையில் கோணியை மாட்டிக் கொண்டு சமாதானம் சமாதானம் என்பார். கடைசியில் ஒரு கல் அவர் தலையையும் பதம் பார்க்கும். கோவூர் கீழார் நிலை என்னவானதோ ?

  • என். சொக்கன் says:

   உசிர் பொழச்சுப் பாட்டெல்லாம் எழுதியிருக்காரே ஸ்வாமி 🙂

 4. Jaya says:

  இந்த பாடல் ஒன்பதாம் வகுப்பிலோ பத்தாம் வகுப்பிலோ மனப்பாடச் செய்யுளாக வந்து இருக்கிறது…

 5. Pingback: புலவர் பெருமை | தினம் ஒரு ’பா’

 6. GiRa ஜிரா says:

  கோவூர் கிழார் – பெயரிலேயே தெரிகிறது இவர் “பெரிய” ஆளென்று. நிலம் நீச்சுகள் நிறைய இருந்திருக்க வேண்டும். கோவூரிலேயே பெரிய கிழாராக இருந்திருக்க வாய்ப்புண்டு.

  இணையத்தில் கோவூர் என்று தேடினால் கேரளாவில் ஒரு ஊரும் குன்றத்தூர் அருகே ஒரு ஊரும் இருப்பதாகத் தெரிகிறது. இவர் சோழநாட்டுக் கோவூரைச் சேர்ந்தவர். அதனால் எந்தக் கோவூர் என்று வரையறுக்க முடியவில்லை.

  இவரைப் பற்றித் தேடினால், இவர் ஒரு அமைதிக்காவலனாக இருந்திருக்கிறார். போரை வெறுத்திருக்கிறார். அதை மன்னர்களிடம் எடுத்துச் சொல்லத் தயங்கியதாகவும் தெரியவில்லை.

  படித்தவர்கள் நல்லதைச் சொன்னால் கேட்கும் மன்னர் அப்போது இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

  இந்தப் பாடல் மட்டுமல்ல, ”நீயே புறவின் அல்லல் அன்றியும்” என்ற மற்றொரு புறநானூற்றுப் பாடலிலும் அவர் அரசனுக்கு அறிவுறுத்துகிறார்.

  எனக்கு இந்தப் பாடலில் பிடித்த மற்றொன்று மூவேந்தர்களின் மாலை அடையாளங்களையும் கூறுவது.

  இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
  கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
  நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே நின்னொடு
  பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே

  சேரன் அணியும் பனம்பூவை வெண்மையான தோடு என்று கூறுவது அழகாக இருக்கிறது. கரிய கிளைகளை உடைய வேம்பின் பூக்களை அணிந்தவன் பாண்டியன். ஆத்திமரம் சோழனுக்கு உரியது. நின்ன கண்ணியும் ஆத்தி என்று சொல்வதிலிருந்து புலவர் அறிவுரை கூறுவது சோழனுக்கு என்று அறியலாம்.

  நின்ன கண்ணியும் என்ற சொற்றொடரில் “நின்ன” என்ற சொல்லுக்கு ”உன்னுடைய” என்று பொருள். இந்த நின்ன என்ற சொல் அதே பொருளில் இன்றும் கன்னடத்தில் வழங்கப்படுகிறது.

  நின்ன கண்ண கண்ணடியல்லி கண்டே நன்ன ரூப்பா (உந்தன் கண்ணாம் கண்ணாடியிலே கண்டேன் எந்தன் ரூபம்) என்ற பீ.பி.சீனிவாஸ் பாடல் மிகப் பிரபலமானது.

 7. Perumaian says:

  `தோற்பது குடியே` என்று இருக்கிறது. அது, `தோற்பது நும் குடியே` என்று இருக்க வேண்டும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s