நதியின் குற்றம் இல்லை

’நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; அற்றே

பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரத்தாள்

மதியின் பிழை அன்று, மகன் பிழை அன்று மைந்த!

விதியின் பிழை! நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான்

நூல்: கம்ப ராமாயணம் (அயோத்தியாகாண்டம் / நகர்நீங்கு படலம் / பாடல் 129)

பாடியவர்: கம்பர்

சூழல்: கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் பெறுகிறார். அதன்மூலம் பரதனுக்கு முடிசூட்டவும் ராமனைக் காட்டுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்துவிடுகிறார். இதைக் கேள்விப்பட்ட லட்சுமணனுக்குக் கோபம். ராமன் அவனை அமைதிப்படுத்துகிற பாடல் இது

தம்பி, ஒரு நதியில் தண்ணீர் இல்லாவிட்டால் அது அந்த நதியின் தவறு அல்ல (மலைமேல் மழை பெய்தால்தானே நதியில் நீர் வரும்?)

இங்கே நடந்த விஷயமும் அப்படிதான் – வரம் கேட்ட தாய்(கைகேயி)மேலும் தப்பு இல்லை, வரம் கொடுத்த நம் தந்தைமேலும் தப்பு இல்லை, எனக்குப் பதில் முடிசூடப்போகும் பரதன்மேலும் தப்பு இல்லை, விதி செய்த குற்றம், இதற்கு ஏன் கோபப்படுகிறாய்?

துக்கடா:

 1. ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்ற தலைப்பில் ஓர் அருமையான புத்தகம் உண்டு – நாஞ்சில் நாடன் எழுதியது: https://nanjilnadan.wordpress.com/2010/08/02/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/
 2. இந்தப் பாடலை டைப் செய்யச் சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு கூகுளில் தேடியபோது, லட்டுமாதிரி ஒரு விஷயம் சிக்கியது – மேலே நான் நீட்டி முழக்கி விளக்கம் சொல்லியிருக்கும் சமாசாரத்தைக் கீழே உள்ள பாடலில் (1:45லிருந்து கேட்கவும்) கண்ணதாசன் எத்தனை எளிதாகச் சொல்லிவிட்டுப்போகிறார் பாருங்கள்:

002/365

Advertisements
This entry was posted in ஆண்மொழி, கதை கேளு கதை கேளு, கம்ப ராமாயணம், கம்பர், சினிமா, பக்தி, ராமன். Bookmark the permalink.

6 Responses to நதியின் குற்றம் இல்லை

 1. இது சூப்பர். கண்ணதாசன் இது போல நிறைய செய்திருக்கிறார், இல்லையா? அவ்வப்போது இது மாதிரி சுட்டிகளும் தந்தால் மகிழ்வோம்.

  • என். சொக்கன் says:

   நன்றி சத்யராஜ்குமார், இதுபோல் நிறைய உதாரணங்கள் உண்டு – கிடைப்பதைத் தருகிறேன் 🙂

   – என். சொக்கன்,
   பெங்களூரு.

 2. சிறப்பான பாட்டு. இதுக்கு ரெண்டு பாட்டு முன்னாடி ஒண்ணு வரும். இலக்குவன் கோவப்படறதைப் பாத்தி, “கோவமே வராத உனக்கு ஏம்ப்பா கோவம்?”னு இராமன் கேக்க.


  நீண்டான் அது உரைத்தலும், நித்திலம் தோன்ற நக்கு,
  ‘”சேண்தான் தொடர் மாநிலம் நின்னது” என்று, உந்தை செப்பப்
  பூண்டாய்; “பகையால் இழந்தே, வனம் போதி” என்றால்,
  யாண்டோ, அடியேற்கு இனிச்சீற்றம் அடுப்பது? என்றான்


  அண்ணன் காரன் அப்படி சொன்னதும் முத்துப்பல் தெரிய சிரிச்சிக்கிட்டே – dry mirthless laugh – இலக்குவன் சொன்னான்: “உங்கப்பன் இந்த உலகம் உன்னுது”ன்னான், அப்பொ அத ஏத்துக்கிட்ட. பிறகு அவனே “கிடையாது, காட்டுக்குப் போ” அப்படின்னான் (அதக் கேட்டுக்கிட்டு நீயும் வந்துட்ட). இதுக்கு கோவப்படலைன்னா, நான் வேற எதுக்குய்யா கோவப்படுறது?”

  உந்தை-ன்னுட்டான்
  “எந்தை நீ தான், தசரதன் இல்லை” அப்படிங்கறதெல்லாம் பின்னால வருது. ஆனா, disowning அந்த இடத்துலயே நடந்துபோச்சு.

  அந்தப் பகுதி (இதுவரைக்கும்) நாம் படிச்சதுலயே ரொம்ப நெகிழ்ச்சியானது.

  தசரதன் அந்த விஷயத்தை சொல்லத் தயங்கிகிட்டு கைகேயியையே சொல்லச் சொல்றான். கைகேயி: “உங்கப்பா இப்படி கட்டளையிட்டிருக்காருப்பா”ன்னு இராமன் கிட்ட சொல்றா. அதுக்கு பதில்:

  மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?

  இவ்வாசகத்துக்குருகார்….

 3. Pingback: ஆயிரம் இராமர் | தினம் ஒரு ’பா’

 4. GiRa ஜிரா says:

  நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை
  விதி செய்த குற்றமின்றி வேறு ஏதம்மா!

  கவியரசரே! எப்படி உம்மால் மட்டும் முடிந்தது. கம்பன் கவிதையை எளிமையாக திரைக்கவிதையாக்கினீரே!

  கம்பனைப் படிக்கும் போதெல்லாம் வால்மீகியை நினைக்காமல் இருக்க முடிவதில்லை. ஒப்பீட்டுக்காகவது தேடிப் படிக்க வேண்டியிருக்கிறது.

  பரதனுக்குப் பட்டம்னு கேள்விப்பட்டதும் “நின்னினும் நல்லான்”னு சொல்லி இராமனுக்கு ஆதரவா இருப்பது கம்பன் காட்டும் கோசலை.

  பரதனுக்குப் பட்டம்னு கேள்விப்பட்டதும் வால்மீகியின் கௌசல்யா புலம்பித் தவிக்கிறா. ஆசை நாயகியோடு கணவன் போனதால் வாழ்வில் வசந்தம் போன வயதான மனைவியின் புலம்பல் அது.

  இதோ இங்கே இலக்குவண் வந்து ஆத்திரத அம்பு வீசும் போது பாத்திரம் தவறி, “இராமா, இலக்குவன் சொல்வதைக் கேள். நீ ஒப்புக் கொண்டால் உடனடியாகச் செய்திடுவோம்” என்கிறாள் வால்மீகியின் கோசலை.

  பட்டை தீட்டுவதிலும் மெருகேற்றுவதிலும் கம்பன் பெரியாள் தான்.

 5. kannan says:

  //இந்தப் பாடலை டைப் செய்யச் சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு கூகுளில் தேடியபோது// Hope you are aware of this Website “http://tamilvu.org/”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s