அபகார நிந்தை பட்டு உழலாதே
….அறியாத வஞ்சரைக் குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
….உனை நான் நினைத்து அருள் பெறுவேனோ!
இபமாமுகன் தனக்கு இளையோனே,
….இமவான் மடந்தை உத்தமி பாலா,
ஜெபமாலை தந்த சற்குருநாதா,
….திரு ஆவினன்குடிப் பெருமாளே!
நூல்: திருப்புகழ்
பாடியவர்: அருணகிரிநாதர்
முருகா,
யானை முகம் கொண்ட விநாயகரின் தம்பியே, இமவான் என்கிற மலை அரசனின் மகளாகிய உத்தமி பார்வதியின் மகனே, எனக்கு ஜெபமாலையை வழங்கி அருள் செய்த குருவே, திரு ஆவினன் குடியில் வாழும் பெருமாளே,
நான் யாருக்கும் தீமைகளைச் செய்யக்கூடாது, அதனால் ஏற்படுகின்ற பழிக்கு ஆளாகக்கூடாது, வஞ்சர்களோடு சேர்ந்து பழகாமல் இருக்கவேண்டும், நீ எனக்கு உபதேசம் செய்த அந்த மந்திரப் பொருளையே எப்போதும் தியானம் செய்யவேண்டும், எந்நேரமும் உன்னையே நினைத்து உன் அருளைப் பெறவேண்டும். இந்த ஆசை நிறைவேறுமா?
துக்கடா
- திரு ஆவினன்குடி என்பது பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள ஆலயம், இங்கேதான் அருணகிரிநாதருக்கு முருகன் ஒரு ஜெபமாலையைத் தந்து அருளியதாக நம்பப்படுகிறது
234/365
